செய்திகள்

மணப்பாறை அருகே இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு

Published On 2017-01-18 11:03 GMT   |   Update On 2017-01-18 11:03 GMT
மணப்பாறை அருகே இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு நின்று அடக்கினர்.
மணப்பாறை:

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அதனை தடை செய்துவரும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டும் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க தடையை மீறி ஜல்லிக்கட்டு ஆங்காங்கே நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று நவல்பட்டு, மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. தற்காலிக வாடிவாசல் அமைத்த இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் தாங்கள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டனர். அதனை இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

இந்த நிலையில் இன்று திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே உள்ள ஆவரம்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. அங்குள்ள புனித இஞ்ஞாசியார் ஆலயம் முன்பு அந்த கிராமத்தினர் வாடிவாசல் அமைத்திருந்தனர்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு நின்று அடக்கினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வையம்பட்டி போலீசார் ஜல்லிக்கட்டு நடந்த இடத்துக்கு விரைந்து வந்த தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறாவண்ணம் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேபோல் மணப்பாறையை அடுத்த பெரியகுளத்துப்பட்டி பகுதியிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

Similar News