செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் கருப்பு சட்டை அணிந்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து திருப்பூர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-01-18 10:57 GMT   |   Update On 2017-01-18 10:57 GMT
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரி திருப்பூரில் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர்:

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் ஆங்காங்கே மாணவர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய கோரியும் கோ‌ஷமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் இன்று தமிழகம் முழுவதும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

இதேபோல் திருப்பூரிலும் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி, குமரன் கல்லூரி, எல்.ஆர்.ஜி. கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு ஏராளமான கல்லூரி மாணவ- மாணவிகள் திரண்டனர். பின்னர் அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது ‘வாடிவாசல் திறக்கும் வரை வீடு-வாசல் செல்ல மாட்டோம்’ பீட்டாவை தடை செய்ய வேண்டும்’ என்பது போன்ற பதாகைகளை கைகளில் ஏந்தியப்படி கோ‌ஷமிட்டனர். இதனால் திருப்பூர் போலீஸ் துணை கமி‌ஷனர் திஷா மீட்டேல் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு கலை கல்லூரி, எமரால்டு ஐஸ் கல்லூரி, குன்னூர் அரசு மகளிர் கல்லூரி, கூடலூர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டி கே.டி.என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரி இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Similar News