செய்திகள்

கோவில்பட்டியில் பஸ் - ஆட்டோ மோதல்: 3 பேர் பலி

Published On 2017-01-18 10:47 GMT   |   Update On 2017-01-18 10:47 GMT
கோவில்பட்டியில் பஸ் - ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த 11 பேர் நேற்று ஒரு ஆட்டோவில் கோவில்பட்டி ஆவல்நத்தம் விலக்கு அருகே உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அதே ஊரை சேர்ந்த மாரியப்பன் மகன் சுருட்டுலிங்கம்(வயது 29) ஆட்டோவை ஓட்டிச்சென்றார்.

அங்கு சாமி கும்பிட்டுவிட்டு இரவு 9 மணியளவில் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆவல்நத்தம் விலக்கை தாண்டி சர்வீஸ் ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது எதிரில் நெல்லையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் வந்தனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்தவர்களை மீட்டனர்.

இதில் கந்தசாமி மனைவி லோகநாயகி (65), முருகேசன் மனைவி நித்திய கல்யாணி(60) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சுருட்டுலிங்கம், வைத்திலிங்கம் மனைவி அன்னபூரணி(50), மீனாட்சி(70), நீலாகாசினி(70), ஆவுடையப்பன்(45), அவருடைய மனைவி ராஜேசுவரி(40), மகன் தாமோதரன்(7), சண்முகசுந்தரம்(75), ஸ்ரீசித்தர் மகள் ராஜேசுவரி(8), வீரா(40) ஆகிய 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியான லோகநாயகி, நித்திய கல்யாணி ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஆவுடையப்பன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்து ஆறுதல் கூறினார்.

Similar News