செய்திகள்
கால நிலையை கணக்கிட உதவும் கல்சவுக்கை.

பழனி அருகே 6 ஆயிரம் ஆண்டு பழமையான பருவ காலத்தை கணக்கிடும் கல்சவுக்கை கண்டுபிடிப்பு

Published On 2017-01-18 06:36 GMT   |   Update On 2017-01-18 06:36 GMT
6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்கள், கால நிலையை அறிய பயன்படுத்திய கல்சவுக்கை பழனி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழனி:

பழனி அருகே பாப்பம்பட்டி கிராமப் பகுதியில் உள்ளது கொத்தன்கரடு. இங்கு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் கால நிலையை அறிய பயன்படுத்திய கல் சவுக்கை இருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் 3 அடுக்குகள் கொண்ட கல் சவுக்கை உள்ளது. கல் அடுக்குகளின் இடையே உள்ள துளை வழியாக தை மாதத்தில் மாலை நேரத்திலும், ஆடி மாதத்தில் காலை நேரத்திலும் ஒளி புகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கல்சவுக்கை வழியே சூரிய ஒளி தெரிவதை படத்தில் காணலாம்.

இந்த கல்சவுக்கை குறித்து ஆய்வு நடத்திய வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:-

ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை அறிந்து அந்த கால நிலையை பயன்படுத்திக் கொள்ளவும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று அறியவும் இந்த கல சவுக்கை உதவியுள்ளது.

இந்த கல் சவுக்கையைக் கொண்டு தக்சனாயினம் மற்றும் உத்தராயினம் குறித்த முன்னோர் தெரிந்து கொண்டுள்ளனர். தை மற்றும் ஆடி மாதங்களில் முதல் தேதியில் இருந்து, 5 நாட்கள் மட்டுமே சூரிய ஒளி கல் அடுக்குகளின் இடைவெளியில் ஊடுருவுகிறது. 3 அடுக்குகளைக் கொண்ட கல்சவுக்கையில் ஒவ்வொரு கல்லும் சுமார் 8 டன்கள் எடை கொண்டது.

3 அடுக்கையும் ஒரு சிறிய கல் தாங்கி நிற்பது அதிசயமானது. தமிழர்களின் வானிலை குறித்த நுண்ணறிவை பறைசாற்றும் வகையில், இந்த கல்சவுக்கை அமைந்துள்ளது என்றனர்.

Similar News