செய்திகள்

ஆரணியில் புத்தாடை வாங்கியபோது தாத்தா தவறவிட்ட சிறுவனை மீட்டு ஒப்படைத்த போலீசார்

Published On 2017-01-13 11:35 GMT   |   Update On 2017-01-13 11:35 GMT
ஆரணியில் நெரிசலில் தவற விட்ட சிறுவனை மீட்டு அரை மணி நேரத்தில் தாத்தாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

ஆரணி:

ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 4). மோகன்ராஜ் தனது தந்தை வழி தாத்தா சுப்பிரமணியுடன் பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை வாங்குவதற்காக ஆரணி நகரில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றார்.

புத்தாடை வாங்கிய பிறகு அங்குள்ள ஒரு கடையில் பேரனை உட்கார வைத்து விட்டு, வேறு கடையில் பொருட்களை வாங்குவதற்காக தாத்தா சுப்பிரமணி சென்றார். அவர் சென்று நீண்ட நேரமாகியும் வராததால் சிறுவன் கதறி கதறி அழுதான்.

தாத்தாவை தேடி சென்ற சிறுவன் நெரிசலில் சிக்கினான். பொதுமக்கள் சிறுவனை மீட்டு ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சிறுவன் பதில் சொல்ல தெரியாமல் பதறியபடியே அழுதான். இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி, சிறுவன் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது வயது முதிர்ந்தவர் ஒருவர், யாரையோ தேடுவது போல தெரிந்தது. சிறுவன் காட்டிய அடையாளங்களை வைத்து அவனது தாத்தா என்பதை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து தாத்தா சுப்பிரமணியை போலீசார் தேடி கண்டு பிடித்தனர். அவரிடம் சிறுவனை ஒப்படைத்தனர். அரைமணி நேரத்தில் தவறவிட்ட சிறுவனை, தாத்தாவிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி மற்றும் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

ஆரணி நகரில் பொருத்தியுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு பெரும் உதவியாக உள்ளது. தற்போது தவறவிட்ட சிறுவனை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கவும் சி.சி.டி.வி. கேமரா கை கொடுத்தது.

எனவே ஆரணி நகர் மற்றும் புறநகரின் மேலும் பல இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Similar News