செய்திகள்

திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம்

Published On 2017-01-13 11:04 GMT   |   Update On 2017-01-13 11:04 GMT
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் இரவு, பகலாக அதிக எண்ணிக்கையில் வந்தனர்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் தை மாதபிறப்பு, தைபூசம் போன்ற நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரை செல்வர். தை பொங்கலையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் இல்லாது பிற மாவட்டங்களிலிருந்தும் தைமாதம் திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்வதுண்டு.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து செல்லும் பக்தர்கள் நெல்லை வழியாக அலகு குத்தியப்படி நடை பயணமாக வந்த வண்ணம் உள்ளனர்.



இதேபோல வடமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தூத்துக்குடி, பழையகாயல், ஆத்தூர் வழியாக திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் இரவு, பகலாக அதிக எண்ணிக்கையில் வந்தனர்.

அவர்கள் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருகபெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழ் பாடல்களை பாடியவாறு வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், சிலர் நீண்ட அலகு குத்தியபடியும் வந்தார்கள்.

ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் வந்திருந்தனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக இருந்தது. பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.

Similar News