செய்திகள்

கவர்னருடன் மோதல் வேண்டாம்: அமைச்சர்களுக்கு நாராயணசாமி அறிவுரை

Published On 2016-12-16 10:12 GMT   |   Update On 2016-12-16 10:13 GMT
கவர்னருடன் மோதல் வேண்டாம், மாநில வளர்ச்சிக்காக நாம் அவரோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களுக்கு அக்கார்டு ஓட்டலில் விருந்து அளித்தார். இதில், அமைச்சர் நமச்சிவாயம் தவிர அனைத்து அமைச்சர்களும் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னருக்கு எதிராக யாரும் கருத்துகளை கூற வேண்டாம். மாநில வளர்ச்சிக்காக நாம் அவரோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கவர்னரை பற்றி நாம் விமர்சித்தால் அது பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கி விடும்.

நமது ஆட்சியை பொருத்தவரை மாநிலத்தின் வளர்ச்சிதான் முக்கியம். இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை நாம் அனைவரும் சேர்ந்து செய்வோம் என்று கூறினார்.

நேற்று கவர்னருக்கு எதிராக அமைச்சர் கந்தசாமி கருத்து கூறி இருந்த நிலையில் நாராயணசாமி இவ்வாறு பேசி இருக்கிறார்.

இது தொடர்பாக இன்று நாராயணசாமியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கவர்னருக்கும், எங்களுக்கும் எந்தவித மோதல் போக்கும் இல்லை. யூனியன் பிரதேச கவர்னருக்கு என்ன அதிகாரம் என்பது பற்றி அரசியல் சட்டத்தில் உள்ளது. அதேபோல் அமைச்சரவைக்கு என்ன அதிகாரம் என்பது பற்றியும் உள்ளது. இதன்படி கவர்னரும் செயல்படுகிறார். நாங்களும் செயல்படுகிறோம். இதனால் கருத்து வேறுபாடு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னரை பற்றி அமைச்சர் கந்தசாமி புகார் கூறி இருக்கிறாரே? என்று கேட்டபோது, நாளை நிருபர்களை சந்திக்கும் போது இது தொடர்பாக பதில் அளிக்கிறேன் என்று கூறினார்.

Similar News