செய்திகள்

புயல் எச்சரிக்கை நீடிப்பு: குளச்சல் விசைபடகுகள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2016-12-09 09:53 GMT   |   Update On 2016-12-09 09:53 GMT
குமரி மாவட்டத்தில் புயலின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. கடந்த 3 நாட்களாக விசை படகுகள் கடலுக்கு செல்லாததால் குளச்சல் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.
குளச்சல்:

தென் மேற்கு வங்க கடலில் உருவான வார்தா புயல் வருகிற 12- ந் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயல் மையம் கொண்டிருப்பதை அடுத்து தமிழக மீனவர்கள் யாரும் ஆந்திர கடலோர பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

புயல் உருவானதை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் புயலின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டுகின்றன.

மேலும் குளச்சல், குறும்பனை, இனையம் பகுதிகளில் கடல் உள்நீரோட்டம் அதிகமாக உள்ளது. கடலுக்குள் சூறை காற்றும் வேகமாக வீசி வருகிறது. இந்த அறிகுறிகள் காரணமாக குளச்சல் பகுதி மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இன்றும் இதே நிலை நீடித்ததால் அனைத்து விசை படகுகளும் துறைமுகத்தில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டன. கட்டுமரங்கள், வள்ளங்களும் மீன் பிடிக்க செல்லவில்லை.

குளச்சல் துறைமுகத்தில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு கரை திரும்புவது வழக்கம். ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள் அதன்பின்பு கடல் சீற்றம், உள் நீரோட்டம் மற்றும் கடல் சூறைக்காற்று காரணமாக இன்று வரை கடலுக்கு செல்லவில்லை.

கடந்த 3 நாட்களாக விசை படகுகள் எதுவும் கடலுக்கு செல்லாததால் குளச்சல் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. கேரளாவில் இருந்து மீன் வாங்க வரும் வாகனங்களும் வராததால் சிறு கடைகள் நடத்தும் வியாபாரிகளும் பாதிப்புக்கு ஆளானார்கள்.


எப்போதும் பரபரப்பாக காணப்படும் குளச்சல் மீன்பிடித்துறைமுகம் இன்று வெறிச்சோடி கிடந்த காட்சி.

Similar News