செய்திகள்

கேரள மதுக்கடைகளில் 2-வது நாளாக அலைமோதிய கூட்டம்

Published On 2016-12-08 05:48 GMT   |   Update On 2016-12-08 05:48 GMT
கேரளா எல்லையை யொட்டிய குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பாறசாலையில் உள்ள கேரள அரசு மதுக்கடைகளில் கடந்த 2 நாட்களாக தமிழக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.
களியக்காவிளை:

ஜெயலலிதா மறைவை யொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

திடீரென விடுமுறை விடப்பட்டதால் மது பிரியர்கள் தவித்து போனார்கள்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறந்திருந்ததால் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த தமிழர்கள் கேரளா மற்றும் புதுச்சேரிக்கு சென்று மதுப்பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

கேரளா எல்லையை யொட்டிய குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பாறசாலையில் உள்ள கேரள அரசு மதுக்கடைகளில் கடந்த 2 நாட்களாக தமிழக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.

2-வது நாளான நேற்று இரவு வரை இக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இந்த வரிசை சாலையின் ஓரமாக சுமார் ½ கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டிருந்தது.

தமிழக குடிமகன்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று கேரள கடைகளில் ஒருவருக்கு 2 மது பாட்டில்களே விற்கப்பட்டன. கூடுதல் பாட்டில் கேட்டவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த வரிசையை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கடந்து சென்றனர். 

Similar News