செய்திகள்

பேஸ்புக் உதவியால் குடும்பத்துடன் இணைந்த முதியவர்

Published On 2016-12-05 09:32 GMT   |   Update On 2016-12-05 09:54 GMT
காரைக்காலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் பேஸ்புக் உதவியால் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
காரைக்கால்:

காரைக்கால் பாரிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் நலமில்லாமல் படுத்துக் கிடந்தார்.

இந்த தகவல் த.மு.மு.க. மற்றும் மனிதநேய கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த முதியவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் காதர் உசேன் என்பதும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டதாகவும் கூறினார்.

மேலும் தனது ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கிரு‌ஷ்ணப்பட்டினம் என்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து உணவு வழங்கி பாதுகாத்து வந்தனர்.

மேலும் முதியவர் அளித்த தகவலை அவரது படத்துடன் பேஸ்புக்கில் வெளியிட்டனர். முதியவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்தனர்.

இதைஅறிந்த அறந்தாங்கி கிருஷ்ணப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த காதர் உசேன் குடும்பத்தினர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினர்.

அதன்பின்னர் முதியவரின் மகள், மருமகள், பேரன் மற்றும் உறவினர்கள் காரைக்கால் வந்தனர். காதர் உசேனை தாங்கள் அழைத்துச் செல்வதாக கூறி கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு அழைத்துச் சென்றனர்.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் காதர் உசேனை சந்தித்த மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

பின்னர் காதர் உசேன் குடும்பத்தினர் கூறும்போது குடும்பச் சூழலால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காதர் உசேன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பல இடங்களில் நாங்கள் அவரை தேடினோம். பலன் இல்லை.

தற்போது அவர் காரைக்காலில் தங்கியிருந்த விவரம் பேஸ்புக் மூலம் தெரிய வந்தது. இதன் மூலம் அவரை அழைத்துச் செல்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

Similar News