செய்திகள்

கோவை அருகே டிராவல்ஸ் பஸ்-லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2016-12-04 06:24 GMT   |   Update On 2016-12-04 06:24 GMT
கோவை அருகே டிராவல்ஸ் பேருந்தும் லாரியும் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

சென்னையில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கொச்சிக்கு தனியார் டிராவல்ஸ் பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.

பஸ்சில் குறைந்த அளவே பயணிகள் இருந்தனர். பஸ் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவை மதுக்கரையை அடுத்த பாலத்துறை சந்திப்பு பகுதியில் வந்த போது அவ்வழியாக மைதா லோடு ஏற்றி வந்த லாரியும், பஸ்சும் மோதின.

இந்த விபத்தில் டிராவல்ஸ் பஸ் டிரைவரான சென்னை சூளைமேட்டை சேர்ந்த காஜா பஷீர்(41) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பஸ் கிளீனரான கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(21) என்பவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் இருந்த பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். விபத்து நடந்த போது பயங்கர சத்தம் கேட்டதால் அவர்கள் கண்விழித்த போது தான் விபத்தில் டிரைவர் பலியானது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், கணேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் பலியான டிரைவர் காஜாபஷீர் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த முகுந்தன் (45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News