செய்திகள்

பனப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவனை தாக்கிய ஆசிரியர் தலைமறைவு

Published On 2016-12-04 04:31 GMT   |   Update On 2016-12-04 04:31 GMT
பனப்பாக்கம் பள்ளியில் மாணவனை தாக்கிவிட்டு தலைமறைவான ஆசிரியரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நெமிலி:

நெமிலி அடுத்த ரெட்டிவலம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது ஒரே மகன் ஹரிதாஸ் (வயது 14). சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தகுமார் இறந்துவிட்டார்.

ஹரிதாஸ், பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்தது. சமூக அறிவியல் ஆசிரியர் முரளிதரன் பாடம் எடுத்தார்.

வரைப்படம் செய்து வருமாறு கொடுத்த வீட்டு பாடத்தை ஹரிதாஸ் செய்து வரவில்லை. இதனால் ஆசிரியர் முரளிதரன், ஹரிதாஸை பிரம்பால் சரமாரியாக தாக்கினார்.

இதில் ஹரிதாஸூக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிகிச்சைகாக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மாணவனின் தாய் மஞ்சுளா, நெமிலி போலீசில் புகார் அளித்தார்.

ஆசிரியர் முரளிதரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே ஆசிரியர் முரளிதரன் தலைமறைவானார். நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தில் உள்ள ஆசிரியரின் வீட்டுக்கு போலீசார் சென்று பார்த்தபோது, அங்கு அவர் இல்லை.

கைது நடவடிக்கை பாய்வதால் ஆசிரியர் முரளிதரன் முன்னெச்சரிக்கையாக தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Similar News