செய்திகள்
கோவிந்தம்மாள்

நேதாஜி ராணுவ படையில் பணியாற்றிய ஆம்பூர் பெண் தியாகி மரணம்: அமைச்சர் அஞ்சலி

Published On 2016-12-03 08:07 GMT   |   Update On 2016-12-03 08:07 GMT
நேதாஜி ராணுவ படையில் பணியாற்றிய ஆம்பூர் பெண் தியாகி 90 வயதில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இறுதிச்சடங்கு இன்று நடந்தது.
வேலூர்:

ஆம்பூரை சேர்ந்தவர் தியாகி கோவிந்தம்மாள் (வயது 90). ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஜ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) பணியாற்றிய பெருமைக்குரியவர். துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றுள்ளார்.

ஐ.என்.ஏ. ராணுவ முகாமில் மாறுவேடத்தில் புகுந்த நேதாஜியை அடையாளம் தெரியாமல் போனதால், அவரை கோவிந்தம்மாள் தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். மாறுவேடம் களைந்த பிறகே, நேதாஜியை அனுமதித்தார்.

இந்த துணிச்சலுக்காக நேதாஜியிடம் கோவிந்தம்மாள் பாராட்டு பெற்றவர். ஆம்பூரில் லாரி டிரைவராக வேலை செய்துவந்த கோவிந்தமாளின் கணவர் விபத்தில் இறந்துவிட்டார்.

அதன்பிறகு கோவிந்தம்மாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைத்தல், மாவு அரவை மில்லில் வேலை என்று பல வேலைகளை செய்து வந்தார். பின்னர், வயது முதிர்வு காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது.

மாநில அரசு வழங்கிய ஓய்வூதியத்தை மட்டுமே பெற்று வாழ்ந்து வந்தார். கடைசி வரை தியாகி கோவிந்தமாளுக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது. இந்த நிலையில் கோவிந்தம்மாள் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார்.

இவருடைய இறுதிச்சடங்கு இன்று மதியம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பாலாற்றங்கரையில் நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன், ஆம்பூர் எம்.எல்.ஏ. பால சுப்பிரமணியன் மற்றும் பிரமுகர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தியாகி கோவிந்தமாளின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.

Similar News