செய்திகள்

புதுவைக்கு 5 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல்

Published On 2016-12-03 04:22 GMT   |   Update On 2016-12-03 04:22 GMT
சரக்கு, சேவை வரியை அமல்படுத்த புதுவைக்கு 5 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற டெல்லி சென்றார்.

அங்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால், கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்திக்க முடியவில்லை. பின்னர் அவர் புதுவை திரும்பினார்.

இந்த நிலையில் மீண்டும் நாராயணசாமி நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு நேற்று மாலை நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவை யூனியன் பிரதேசம். எனவே, சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதற்கு 5 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளது.

இதனால் விவசாயிகள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது வங்கி கணக்குகளில் பணம் இருந்தாலும் அதனை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Similar News