செய்திகள்
காயமடைந்த பள்ளி மாணவன் பொன்திவாகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி

ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து: 4 மாணவர்கள் கைது

Published On 2016-12-02 07:51 GMT   |   Update On 2016-12-02 07:51 GMT
தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்களுக்கு கத்திக்குத்தில் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளக்காடு:

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் பொன்திவாகர் (வயது 15). அதே பகுதியை சேர்ந்தவர் ரவீந்திராஜ் (15). இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

வழக்கம் போல இன்று காலை கோவங்காட்டில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு டவுண்பஸ்சில் பொன் திவாகரும், ரவீந்திரராஜூம் பள்ளிக்கு சென்றனர். முத்தையாபுரம் அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே பஸ் சென்றுகொண்டிருந்த போது அதே பஸ்சில் இருந்த 4 பள்ளி மாணவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொன்திவாகரையும், ரவீந்திர ராஜையும் குத்தினர்.

இதைபார்த்த சகபள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் அலறினர். இதையடுத்து பஸ் டிரைவர் பாதியிலேயே பஸ்சை நிறுத்தினார். பின்னர் கத்தியுடன் இருந்த 4 மாணவர்களும் பஸ்சை விட்டு கீழே இறங்கி தப்பியோட முயன்றனர். உடனே பயணிகள் விரைந்து சென்று அந்த 4 மாணவர்களையும் மடக்கி பிடித்து முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் கத்திக்குத்தில் காயம் அடைந்த 2 மாணவர்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் பிடிபட்ட 4 மாணவர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த மாணவர்கள் முத்தையாபுரம் ராஜூ நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துராஜ் (16), வெள்ளச்சாமி மகன் முனீஸ்வரன் (15), மாரியப்பன் மகன் முத்துமாரியப்பன் (15), பிச்சையா மகன் திருப்பதி (16) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

ஓடும் பஸ்சில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? வாசல்படியில் தொங்குவதில் ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News