செய்திகள்

அரசாணையை பொதுமக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த வேண்டும் - ஐகோர்ட்டு

Published On 2016-12-02 03:07 GMT   |   Update On 2016-12-02 03:07 GMT
ஆக்கிரமிப்பு புகார்களை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை பொதுமக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த வேண்டும் என அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வி.பி.ஆர்.மேனன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை போரூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தை பலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். இதுகுறித்து கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுக்க வேண்டும். அந்த புகாரின் அடிப்படை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இருந்தும் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏராளமான வழக்குகள் வருகிறதே?’ என்று அரசு வக்கீலிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது மனுதாரர் குறுக்கிட்டு, ‘இந்த அரசாணை குறித்து பொதுமக்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த அரசாணை குறித்து பொதுமக்களுக்கு தெரியும் விதமாக 3 வாரத்துக்குள் ஊடகங்களின் வழியாக அரசு விளம்பரப்படுத்தவேண்டும். நந்தம்பாக்கம் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கையை சட்டப்படி எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். 

Similar News