செய்திகள்

சேத்துப்பட்டில் தண்டவாளம் விரிசல்: மின்சார ரெயில் சேவை பாதிப்பு

Published On 2016-11-29 06:59 GMT   |   Update On 2016-11-29 06:59 GMT
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கும் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கும் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

தாம்பரம் - கடற்கரை மின்சார ரெயில்கள் செல்லக்கூடிய தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை அந்த பகுதியாக சென்ற ஒருவர் பார்த்து ரெயில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சேத்துப்பட்டு யார்டில் இருந்து ஊழியர்கள் உடனடியாக சென்றனர். தண்டவாளம் இணைக்கும் பணியில் ‘ராடு’ விலகி இருந்தது.

குளிர்காலத்தில் கடும் பணி காரணமாக தண்டவாளம் இணைப்பு பகுதி வழக்கமாக சுருங்கி இணைந்து கொள்ளும். இதனால் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ‘போல்டு நட்’ தளர்ந்து அதிர்வு ஏற்பட்டது தெரிந்தது. இதனை ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



இதனால் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன. தண்டவாளம் சீரமைக்கும் பணி முடிந்ததையடுத்து அந்த பாதை வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டன.

தண்டவாளம் விரிசல் காரணமாக ஒரு மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதித்தது. பின்னர் மின்சார ரெயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன. குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதனால் காலையில் வேலைக்கு செல்லக்கூடியவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு போகக்கூடியவர்கள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டனர்.



சம்பவ இடத்திற்கு எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் நேரில் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Similar News