செய்திகள்

500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு

Published On 2016-11-10 05:55 GMT   |   Update On 2016-11-10 05:55 GMT
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் சீனி அகமது மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை:

நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத செயல்களை ஒடுக்கவும் மத்திய அரசு புதிய செயல்பாட்டில் இறங்கி உள்ளது. இதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அவை இனி காகிதங்கள்தான் என பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அன்றைய தினம் நள்ளிரவே அமுலுக்கு வந்ததால், நேற்று பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பால், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வாங்கவும், வெளியூர்களுக்கு பயணம் செய்யவும் அவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

மத்திய அரசின் திடீர் முடிவுக்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த நிலையில் இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் சீனிஅகமது, மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி, திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு செய்துள்ளார். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் ஒரு நாளைக்கு புதிய 500, 2000 ரூபாய்களை ஏ.டி.எம்.களில் எடுக்க சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவும் பொதுமக்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். 2000 ரூபாய்தான் ஏ.டி.எம்.மில் தினம் எடுக்க முடியும் என்ற நிலை தொழில் செய்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

இதனை தவிர்க்க பஸ் நிலையம், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களில் கூடுதல் கவுண்டர்கள் அமைத்து புதிய ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

Similar News