செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே போலி டாக்டர் கைது

Published On 2016-11-03 04:59 GMT   |   Update On 2016-11-03 05:00 GMT
உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 வரை படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் போலி டாக்டர்கள் செயல்படுவதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஜோதிக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அவரது தலைமையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள மருத்துவமனை, மருந்தகங்களில் திடீர் ஆய்வு நடைபெற்றது. அப்போது உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்துக்கு பின்புறம் ராணி ஆயுர்வேத வைத்தியம் என்ற பெயரில் இயங்கி வந்த ஒரு மருத்துவமனையில் போலி டாக்டர் இருப்பதை அதிகாரிகள் அறிந்தனர்.

அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தவரிடம் டாக்டர் ஜோதி விசாரித்தார். விசாரணையில் அவர் மேற்குவங்க மாநிலம் பர்க்குஸ் மாவட்டத்தை சேர்ந்த அனுப்(வயது 30) என்பதும், அவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அனுப்பை உளுந்தூர்பேட்டை போலீசில் ஒப்படைத்து புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி டாக்டர் அனுப்பை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. அனுப்பின் உறவினரான ஒருவரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News