செய்திகள்
தலைமையாசிரியர் குணசேகரன்

தர்மபுரி அருகே அரசு பள்ளியில் மது போதையில் தள்ளாடிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு: கல்வி அதிகாரி நடவடிக்கை

Published On 2016-11-02 04:42 GMT   |   Update On 2016-11-02 04:43 GMT
தர்மபுரி அருகே அரசு பள்ளியில் மது போதையில் தள்ளாடிய தலைமை ஆசிரியரை சஸ்பெண்டு செய்ய கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தர்மபுரி:

தர்மபுரியை அடுத்த ஆட்டுக்காரன்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

தர்மபுரி பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியர் குணசேகரன் உள்பட 12 ஆசிரியர்-ஆசிரியைகள் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் தலைமை ஆசிரியர் குணசேகரன் குடித்து விட்டு அடிக்கடி பள்ளிக்கு வருவதாக புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று மதிய உணவு இடைவேளையில் பள்ளியில் உள்ள அறையில் வைத்து குணசேகரன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மாணவ -மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அப்போது தலைமை ஆசிரியர் குணசேகரன் மது அருந்தி விட்டு தள்ளாடிய படி இருந்தது உறுதியானது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தலைமை ஆசிரியர் குணசேகரன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பழனிச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரனிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணை அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் குணசேகரணை சஸ்பெண்டு செய்ய கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளளனர். அதற்கான உத்தரவு இன்று தலைமை ஆசிரியர் குணசேகரனிடம் வழங்கப்பட உள்ளது.

Similar News