செய்திகள்

வேலூர் விமான நிலையத்தில் சிறிய ரக விமானங்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை

Published On 2016-10-27 11:49 GMT   |   Update On 2016-10-27 11:49 GMT
வேலூர் விமான நிலையத்தில் சிறிய ரக விமானங்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேலூர்:

வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இந்திய விமான போக்குவரத்து ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த விமான நிலையம் தற்போது செயல்படாமல் உள்ளது.

இந்த நிலையில் விமான போக்குவரத்து துறையின் தென்னக கோட்ட நிர்வாக இயக்குனர் ராஜூ மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் அப்துல்லாபுரத்துக்கு வந்து விமான நிலையத்தை ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.

இந்த ஆய்வு குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆரம்ப காலத்தில் சிறிய ரக விமானங்கள் பயன்பாட்டில் இருந்தது.

நாளடைவில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது செயல்படாத விமான நிலையமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு, பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்கள் குறித்து கணக்கெடுத்து அவற்றை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதன்படி வேலூர் விமான நிலையத்தை உள்நாட்டு முனையமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சிறிய ரக விமான நிலையங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த விமான நிலையத்தில் போக்குவரத்து தொடங்க தனியார் விமான போக்குவரத்து நிலையங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கு விமான போக்குவரத்து தொடங்குவதன் மூலம் பல்வேறு உள்கட்டமைப்பு பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News