செய்திகள்

திசையன்விளை அருகே மாணவர்களை இலவசமாக பஸ்சில் அழைத்து வந்து பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

Published On 2016-10-27 10:34 GMT   |   Update On 2016-10-27 10:34 GMT
திசையன்விளை அருகே மாணவர்களை இலவசமாக பஸ்சில் அழைத்து வந்து பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசியர்களின் இந்த பணியை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரில் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி உள்ளது. சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும்.

8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளி ஆரம்ப காலத்தில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வந்தார்கள். காலபோக்கில் ஆங்கில பள்ளி மோகம் காரணமாக பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து உள்ளது.

மாணவர் சேர்க்கையை அதிகரித்து பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை கூட்ட கிராமம் கிராமமாக செல்ல வேண்டும் என ஆசிரியர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று பெற்றோர்களை சந்தித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டனர். அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப பஸ் வசதி இல்லை என கூறினர்.

அதற்கு ஆசிரியர்கள் நாங்கள் இலவசமாக பஸ் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் மாணவர்களை அனுப்பி வையுங்கள் என கூறினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆசிரியர்கள் பஸ்சில் இலவசமாக அனுப்பி வைத்தனர்.

இதனால் தினசரி 49 மாணவர்கள் இலவசமாக பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதனால் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. காலை, மாலை இரு வேளைகளிலும் ஆசிரியர்களே மாணவர்களை பஸ்சில் இருந்து இறக்கி ஏற்றியும் விடுகிறார்கள். ஆசியர்களின் இந்த பணியை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

Similar News