செய்திகள்

பாவூர்சத்திரத்தில் போலி சித்த வைத்தியர்கள் 2 பேர் கைது

Published On 2016-10-26 05:00 GMT   |   Update On 2016-10-26 05:00 GMT
பாவூர்சத்திரத்தில் மருத்துவக்குழு சோதனையில் போலி சித்த வைத்தியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம்:

நெல்லை மாவட்டம் தென்காசி மலையான் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 60). இவர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு நிரிழிவு, வாதம் போன்ற நோய்களுக்கு நாட்டு மருந்து தயாரித்து கொடுத்து வந்தார்.

கடந்த 23-ந் தேதி அழகப்பபுரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது35), இருளாண்டி (37), சுவாமிநாதன் (45) ஆகிய 3 பேர் முத்துப்பாண்டியிடம் நிரிழிவு மருந்து சாப்பிட்டனர். அப்போது முத்துப்பாண்டியும் அந்த மருந்தை சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் மருந்து சாப்பிட்ட 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

அப்போது அங்கு வந்தவர்கள் 4 பேரையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி, பாலசுப்பிரமணியன், இருளாண்டி ஆகிய 3 பேரும் இறந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள போலி நாட்டு மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாணிக்கத்தாய் தலைமையில் டாக்டர்கள் கலா, சண்முக சுந்தரம், துரைராஜ், துரைப்பாண்டியன், அரிகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்டத்தின் பல இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாவூர்சத்திரம் பகுதியில் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த 2 சித்த மருந்துவ மையங்ளை டாக்டர்கள் குழு நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள மருந்துவ மையத்தில் அனுமதி பெறாமல் சித்த மருந்துகள் விற்பனை செய்வது தெரியவந்தது. பாவூர்சத்திரம்- சுரண்டை ரோட்டில் உள்ள சித்த மருத்துவ மையத்தில் காலாவதியான மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு அனுமதியின்றி சித்த மருந்துகள் தயார் செய்ததும், முறையாக படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவ குழுவினர் கலெக்டரிடம் அறிக்கை அளித்தனர். இதையடுத்து போலி சித்த வைத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாவூர்சத்திரம் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் திருமலாபுரத்தை சேர்ந்த கதிரேசன் (வயது 32), குறும்பலாபேரியை சேர்ந்த பிரபு (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News