செய்திகள்

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது

Published On 2016-10-25 05:06 GMT   |   Update On 2016-10-25 05:29 GMT
தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கலையொட்டி அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கரூர்:

தமிழகத்தில் கடந்த மே மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது பணப்பட்டுவாடா புகாரின் பேரில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு முடி வுகள் அறிவிக்கப்பட்டன.

இதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சீனிவேல் மரணம் அடைந்தார். எனவே அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

இதையடுத்து காலியாக உள்ள அந்த மூன்று தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 17-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதலே 3 தொகுதிகளிலும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வருகிற 2-ந்தேதி மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். 3-ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 5-ந்தேதி மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சைபுதீனிடம் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கலையொட்டி அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மனு தாக்கல் செய்ய வருபவர்கள், தங்களது வாகனங்களை, தாசில்தார் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தள்ளி நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 வாகனங்கள் மட்டும் மனு தாக்கல் நடைபெறும் பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தேர்தல் விதிகளை கடைபிடிக்க வேண்டுமென அதிகாரி சைபுதீன் கேட்டுக்கொண்டுள்ளார். வேட்புமனு தாக்கல் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

அரவக்குறிச்சி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,79,307. இதில் ஆண் வாக்காளர்கள் 1,39,164 பேர், பெண் வாக்காளர்கள் 1,40,122 பேர், திருநங்கை 21 பேர் உள்ளனர்.

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) இன்னாசி முத்துவிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் 157 இடங்களில் 245 ஓட்டுச்சாவடிகள், தஞ்சாவூர் தொகுதியில் 88 இடங்களில் 276 ஓட்டுசாவடிகள், திருப்பரங்குன்றம் தொகுதியில் 97 இடங்களில் 291 ஓட்டுச் சாவடிகள் என மொத்தம் 812 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் 3 ஆயிரத்து 248 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது தவிர கூடுதலாக 3 தொகுதிகளுக்குமாக 650 பேர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News