செய்திகள்

வி‌ஷம் வைத்த மக்காச்சோளத்தை தின்ற 15 மயில்கள் பலி: தோட்ட உரிமையாளர் மீது வழக்கு

Published On 2016-10-23 15:05 GMT   |   Update On 2016-10-23 15:05 GMT
வி‌ஷம் வைத்த மக்காச்சோளத்தை தின்ற 15 மயில்கள் பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை:

உடுமலை வனப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மயில்கள் வசித்து வருகின்றன. அவைகள் அங்குள்ள வனப்பகுதி மற்றும் விவசாய தோட்டங்களில் கறையான் மற்றும் தீனி தேடி வரும். இங்கு பல இடங்களில் மயில்கள் மேய்வதை காணலாம்.

இந்தநிலையில்உடுமலை பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயசேகரன் (வயது 42). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். மக்காச்சோள பயிர்கள் தற்போது துளிர் விட்டுள்ளது. நோய்கள் தாக்காமல் இருக்க செடிகளுக்கு குருணை மருந்து அடித்தார். நேற்று அவரது தோட்டத்தக்கு 15 மயில்கள் மேய்ச்சலுக்கு வந்தன. மக்காச்சோள இலைகளை மயில்கள் தின்றன. மேய்ந்த சில நிமிடங்களில் மயில்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்தன. 15 மயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக பரிதாபமாக இறந்தது.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பாக வனச்சரக அலுவலர் பெரியசாமிக்கு தகவல் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் உடுமலை ரேஞ்சர் மாரியப்பன் தலைமையிலான வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்த 15 மயில்களின் உடல்களை மீட்டு சோதனை செய்தனர்.

மயில்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது பூச்சி மருந்து அடித்த மக்காச்சோளம் இலைகளை சாப்பிட்டதால் இறந்ததா? மக்காச்சோளம் பயிர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்குத்தான் மருந்து அடிக்கப்பட்டதா? என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும்.

பிரேத பரிசோதனைக்காக கோவையில் உள்ள ஆய்வு கூடத்துக்கு மயில்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. வன அதிகாரிகள் இதுகுறித்து உடுமலை போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தோட்ட உரிமையாளர் விஜயசேகரனை தேடி வருகிறார்கள்.

Similar News