செய்திகள்
மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வேன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை படத்தில் காணலாம்.

ஏலகிரி மலைப்பாதையில் சென்னை சுற்றுலா பயணிகளின் வேன் தீப்பிடித்து எரிந்தது

Published On 2016-10-23 02:23 GMT   |   Update On 2016-10-23 02:23 GMT
ஏலகிரி மலைப்பாதையில் சென்னையில் இருந்து சென்ற சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஜோலார்பேட்டை:

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ஹரீஸ் (வயது 26). சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வைதேகி (26). இவர்களுக்கு மித்ரன் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

இவர்கள் வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலை இவர்கள் தங்களது உறவினர்கள் 4 பேருடன் ஒரு சுற்றுலா வேனில் ஏலகிரிக்கு புறப்பட்டனர். வேனை மயிலாடுதுறையை சேர்ந்த புஷ்பராஜ் (28) ஓட்டிச் சென்றார்.

நண்பகல் 1.30 மணி அளவில் ஏலகிரி மலைப்பாதையில் 5-வது வளைவில் சென்றபோது வேனின் என்ஜினில் இருந்து அதிக அளவு புகை வருவதை பார்த்ததும் வேனில் இருந்தவர்கள் அலறினர். டிரைவர் புஷ்பராஜ் உடனடியாக வேனை நிறுத்தினார்.

அதனை தொடர்ந்து அனைவரும் அலறியடித்துக்கொண்டு வேனிலிருந்து கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். சிறிது நேரத்தில் வேன் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுபற்றி திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற வீரர்கள் வேன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ஹரீஸ் மற்றும் அவரது உறவினர்கள் கொண்டு வந்திருந்த லேப்டாப், ஐபோன், கேமரா உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனால் ஏலகிரி மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து ஏலகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News