செய்திகள்

தோட்டத்தில் வைத்து வழிபட்ட சிவலிங்கத்தை அகற்ற முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பு-போராட்டம்

Published On 2016-10-22 11:21 GMT   |   Update On 2016-10-22 11:21 GMT
விக்கிரவாண்டி அருகே தோட்டத்தில் வைத்து வழிபட்ட சிவலிங்கத்தை அகற்ற முயற்சித்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள வேலியாந்தல் பகுதியை சேர்ந்தவர் குமார கிருஷ்ணன். இவருக்கு பூண்டியில் விவசாய நிலம் உள்ளது. இதில் கொய்யா தோப்பு அமைத்துள்ளார்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொய்யா தோப்பில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நிலத்தின் அடியில் கல் ஒன்று தட்டுப்பட்டது.

அந்த இடத்தில் அவர்கள் தோண்டிப்பார்த்தனர். அங்கு 2½ அடி உயரம் உள்ள சிவலிங்கம் இருந்தது. அதனை வெளியே எடுத்தனர். இது குறித்து நிலத்தின் உரிமையாளர் குமாரகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அந்த நிலத்திலேயே சிலையை வைத்திருந்தார்.

இந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. ஊர் பொதுமக்கள் குமார கிருஷ்ணனின் தோட்டத்துக்கு வந்து சிவலிங்கத்தை வழிபட்டனர்.

தொடர்ந்து பொதுமக்கள் அந்த தோட்டத்துக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் வந்து வழிபட்டு வந்தனர்.

குமாரகிருஷ்ணன், அங்கு வந்த பொதுமக்களிடம் இனிமேல் யாரும் இங்கு வந்து சிலையை வழிபடக்கூடாது. நீங்கள் வருவதால் எனது விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது என்று கூறினார்.

ஆனால், தொடர்ந்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் குமார கிருஷ்ணன் சிலர் உதவியுடன் அந்த சிவலிங்கத்தை தோட்டத்தில் இருந்து எடுத்து டிராக்டரில் ஏற்றி வெளியே கொண்டு செல்ல முயன்றார்.

தகவல் அறிந்த பூண்டி கிராம மக்கள் உடனடியாக அங்கு கூடினர். அவர்கள் சிலையை வெளியே எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News