செய்திகள்

போலி ஆவணங்கள் சமர்ப்பித்த 500 பேரின் பாஸ்போர்ட்டுகள் முடக்கம்

Published On 2016-10-21 02:21 GMT   |   Update On 2016-10-21 02:21 GMT
போலி ஆவணங்கள் சமர்ப்பித்த 500 பேரின் பாஸ்போர்ட்டுகள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார்.
மதுரை:

இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணீஸ்வரராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிநாடுகளில் 3 வருடங்கள் வேலைபார்த்தவர்கள், வருமானவரி செலுத்தியவர்களுக்கு இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்காக வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் வருவதாக கூறி சிலர் போலி வருமானவரி சான்று பெறுகின்றனர். வெளிநாட்டில் வேலைக்கு செல்லாமல், அங்கு வேலை பார்த்ததாக போலியாக பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து வருகின்றனர். அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றுள்ளதாக போலி சான்றிதழ் சமர்ப்பிக்கின்றனர்.

கடந்த 7 மாதங்களில் ஏஜெண்டுகள் மூலம் போலி ஆவணங்கள் தயார் செய்து இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட் பெற்றவர்களுக்கு விளக்க கடித நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, 500 பேரின் பாஸ்போர்ட்டுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

போலியாக இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட் பெற்று சம்பந்தப்பட்ட நாடுகளில் வேலைக்கு சென்று பாதிக்கப்பட்டால், அவர்களை இந்திய தூதரகம் திருப்பி அனுப்பி விடும். வேலைவாய்ப்பு கடிதத்துடன் குடியுரிமை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இ.சி.என்.ஆர். சான்றிதழ் வாங்கி கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டில் ஏமாற்றப்பட்டாலும், அந்த நாட்டு சட்டத்தின்படி வேலைவாய்ப்பு கொடுத்த நிறுவனத்திடம் இருந்து நஷ்ட ஈடு பெற முடியும்.

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டை உடனடியாக சரண்டர் செய்து, புதிய பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விமான நிலையங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News