செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: செங்கத்தில் அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

Published On 2016-10-04 09:31 GMT   |   Update On 2016-10-04 09:31 GMT
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அ.தி.மு.க.மகளிரணி நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கம்:

செங்கத்தை அடுத்த சே.சொப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தாமரை கண்ணன். இவருடைய மனைவி ‌ஷகிலா (வயது 52), அ.தி.மு.க. மகளிரணி ஒன்றிய துணை செயலாளர். ‌ஷகிலா சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலையிலும், பின்னர் சட்டமன்ற தேர்தலிலும் செங்கம் தொகுதியில் போட்டியிட ‌ஷகிலா வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட ‌ஷகிலா விண்ணப்பித்துள்ளார். ஆனால் ‌ஷகிலாவிற்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் விரக்தி அடைந்த ‌ஷகிலா நேற்று செங்கம் புதிய பஸ்நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்.சிலை எதிரில் வந்து நின்று திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விரைந்து சென்று ‌ஷகிலா கையில் இருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பறிமுதல் செய்தனர். மேலும் உடனடியாக அவரின் உடலில் தண்ணீர் ஊற்றி, செங்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ‌ஷகிலா கூறுகையில், ‘‘மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டேன். எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்து விட்டார்கள். எனவே மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றேன்’’ என்று கூறினார். போலீசார் தொடர்ந்து ‌ஷகிலாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News