செய்திகள்

சேலம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

Published On 2016-09-30 06:11 GMT   |   Update On 2016-09-30 06:11 GMT
சேலம் அருகே இன்று அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
தர்மபுரி:

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து தர்மபுரிக்கு இன்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த பஸ் மேட்டூர் பிரிவு ரோடு வழியாக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலைக்கு நுழைய முயன்றது. அப்போது கரூரில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஒரு மணல் லாரி அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் மேச்சேரி போலீசார் அங்கு விரைந்து சென்று பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த அனைவரையும் மீட்டனர்.

ஆனால் அதற்குள் பஸ்சில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 6 பேர் இறந்தனர். மேலும் காயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் பல கி. மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

Similar News