செய்திகள்

சந்தவாசல் அருகே தந்தையை கழுத்தை இறுக்கி கொன்ற பிளஸ்-2 மாணவன்

Published On 2016-09-29 06:34 GMT   |   Update On 2016-09-29 06:34 GMT
சந்தவாசல் அருகே ஆபாசமாக திட்டியதால் தந்தையின் கழுத்தை இறுக்கி கொன்ற பிளஸ்-2 மாணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணமங்கலம்:

வேலூர் அடுத்த அமிர்தி நஞ்சு கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 50). ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.

இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள கல்வாசல் அருந்ததி பாளையத்தை சேர்ந்த சுமதி (40) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு சசிக்குமாரி (21) மற்றும் சுசிலா குமாரி (18) என்ற 2 மகள்களும், சதீஷ் (17) என்ற ஒரு மகனும் உள்ளனர். சகாதேவன் ராணுவத்தில் பணி புரிந்ததால், திருமணமான சில நாட்களிலேயே மனைவி மற்றும் குழந்தைகளை மாமியார் வீட்டில் தங்க வைத்தார்.

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சகாதேவன் மாமியார் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கினார். தற்போது அவர், ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார்.

மகன் சதீஷ், அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். இந்த நிலையில் சகாதேவனுக்கும், மனைவி சுமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

அப்போது, தாய்க்கு ஆதரவாக தந்தையிடம் சதீஷ் சண்டையிட்டுள்ளார். சகாதேவன் கோபத்தில் சதீஷை ஆபாசமான வார்த்தைகளால் கடிந்து கொட்டியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சதீஷ், தந்தையை கொலை செய்ய திட்டம் வகுத்தார்.

தினமும் மதியம் 2 மணிக்கு ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு வரும் சகாதேவன், சாப்பிட்டு விட்டு சிலமணி நேரம் தூங்குவார். வழக்கம் போல் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வந்த சகாதேவன் சாப்பிட்டு விட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த சதீஷ் ஜன்னல் கதவில் இருந்த கயிற்றை எடுத்து வந்து, தந்தை என்றும் பார்க்காமல் கழுத்தில் சுற்றி இறுக்கினார். மகனின் பிடியில் சிக்கிய சகாதேவன் மூச்சு விட முடியாமல் திணறி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து, எதுவும் நடக்காதது போல சதீஷ் வீட்டில் இருந்து விளையாடுவதற்காக வெளியே சென்று விட்டார். அடுத்த சில நிமிடங்களில் சகாதேவன் இறந்து கிடப்பதை பார்த்து, மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து, சகாதேவனின் அண்ணன் அண்ணாதுரைக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். அண்ணாதுரை தனது உறவினர்களுடன் விரைந்து சென்றார்.

தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதார். கழுத்து பகுதியை பார்த்தபோது, இறுக்கப்பட்ட அடையாளம் இருந்தது. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதை அண்ணாதுரை அறிந்தார்.

இதுகுறித்து, சந்தவாசல் போலீசில் புகார் அளித்தார். ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் முரளி சுந்தரம் மற்றும் சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் ஷேமலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சகாதேவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் மனைவி, மகள்கள், மகனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மகன் சதீஷ் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சதீஷை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, தந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

ஆபாசமான வார்த்தைகளால் தன்னை திட்டியதால் தீர்த்து கட்டியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, சதீஷை போலீசார் கைது செய்தனர்.

கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News