செய்திகள்

திருச்சியில் நகை-பணத்துக்காக 7 பேரை கொன்ற சைக்கோ வாலிபர் கைது

Published On 2016-09-29 05:30 GMT   |   Update On 2016-09-29 05:30 GMT
திருச்சியில் நகை-பணத்துக்காக 7 பேரை கொன்ற சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரைச் சேர்ந்தவர் தங்கதுரை (வயது 38). திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரனின் உறவினரான இவர் சொந்தமாக கார், டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார்.

கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு சென்ற தங்கதுரை மாயமாகி விட்டார். 2 நாட்ள் கழித்து அவரது உடல் திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பத்தாளப்பேட்டை வாய்க்காலில் நிர்வாண நிலையில் தென்னங்கீற்றால் சுற்றி புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

அவரது மோட்டார் சைக்கிள் துவாக்குடி வாழவந்தான்கோட்டை அருகே கல்குவாரி பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. தங்க துரையை கொன்று புதைத்தது யார்? என்பது குறித்து திருவெறும்பூர் டி.எஸ்.பி. கலையரசன், இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

தங்கதுரையின் காணாமல் போன செல்போன் இ.எம். ஐ. நம்பர் மூலம் துப்பு துலக்கினர். அப்போது தங்கதுரையின் செல்போனை கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்த சப்பாணி (35) என்பவர் பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. சப்பாணியை போலீசார் பிடித்து செல்போன் எப்படி கிடைத்தது என்பது குறித்து கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசிய சப்பாணி அதன் பிறகு தங்கதுரையை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டான்.

தங்கதுரை மட்டுமல்லாமல் மேலும் 7 பேரை இதே போன்று கொன்று புதைத்ததாக சப்பாணி கூறி போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தான். இது தமிழகத்தை உலுக்கிய ஆட்டோ சங்கர் விவகாரத்தை போல நெஞ்சை உறைய வைக்கும் சம்பவமாக தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

சப்பாணிக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சப்பாணி செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தார். மேலும் தன்னிடம் பழகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மனைவி மோகனப்பிரியாவுடன் உல்லாசமாக இருக்க வைத்து ஆண்களிடம் பணம், நகையை பறித்து வந்துள்ளார்.

இதன் மூலம் சப்பாணியும் மோகனப்பிரியாவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பணம், நகையை பறித்த பிறகு சிலரை சப்பாணி கொலை செய்துள்ளார். இதுவரை 7 பேரை கொன்று கிருஷ்ணசமுத்திரம் வாய்க்கால் பகுதியில் புதைத்துள்ளதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

மனைவி மோகனப்பிரியா சப்பாணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கபடி வீரர் ஒருவருடன் சென்று விட்டார். இதனால் சப்பாணி பணம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது பள்ளி தோழரான தங்கதுரை கழுத்தில் அணிந்திருந்த மற்றும் வங்கியில் வைத்திருந்த பணத்தை அபகரிக்க திட்டமிட்டார்.

சம்பவ தினமான 7-ந்தேதி இரவு தங்கத்துரையை அழைத்து சென்று பத்தாளப்பேட்டை பகுதியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். பிறகு அவரது ஏ.டி.எம். நம்பரை வாங்கி ரூ.1 லட்சம் பணம் எடுத்துள்ளார். தங்கதுரைக்கு போதை ஏறியதும் அவரை கட்டையால் தாக்கி கொன்றுள்ளார்.

இதே போன்று சப்பாணி 7 பேரை கொன்று புதைத்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். 7 பேர் உடல்களையும் கிருஷ்ணசமுத்திரம் அருகே புதைத்துள்ளதாக கூறியுள்ளார். சப்பாணி கொன்று புதைத்த வாலிபர்கள் யார்-யார்? என்பது குறித்து சமீபத்தில் காணாமல் போன நபர்களின் பட்டியலை திரட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சப்பாணி கொன்று புதைத்த இடத்தில் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று சப்பாணியை அப்பகுதிக்கு அழைத்து சென்று உடல்கள் புதைத்த இடம் எங்கே என அடையாளம் காட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் ஒரு காப்பகத்தில் உள்ள சப்பாணியின் மனைவி மோகனப்பிரியாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Similar News