செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் ஒருமாத உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சம்

Published On 2016-09-28 12:29 GMT   |   Update On 2016-09-28 12:29 GMT
தஞ்சை பெரியகோவிலில் ஒரு மாதத்தில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.7 லட்சம் வசூலானது.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, கருவூரார் சன்னதி, முருகன் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று பெரியகோவிலில் உள்ள 11 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. தஞ்சை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி ஆகியோர் முன்னிலையில் செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் ரெங்கராஜன் ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.

இதில் வங்கி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.7 லட்சத்து 10 ஆயிரத்து 219 கிடைத்துள்ளது. மேலும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 92-ம் இருந்தன.

Similar News