செய்திகள்

சசிக்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: எச்.ராஜா பேட்டி

Published On 2016-09-27 09:09 GMT   |   Update On 2016-09-27 09:09 GMT
தமிழக அரசு சசிக்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க பரிந்துரைக்க வேண்டும் என்று எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
கவுண்டம்பாளையம்:

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று சசிகுமாரின் வீட்டிற்கு வந்து அவரது மனைவி யமுனா, தந்தை சின்னசாமி, தாயார் ராதா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின்னர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு எச்.ராஜா சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

ஓசூரில் மாவட்ட நிர்வாகி சூர்யா படுகொலை, திண்டுக்கல் மாவட்ட தலைவர் சங்கர், திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, கன்னியாகுமரியில் மாவட்ட நிர்வாகிகள் தாக்குதல் போன்ற தொடர் சம்பவங்கள் நடந்து வருகிறது.

சசிகுமார் கொலை செய்யப்பட்டு ஒருவாரம் ஆகியும் சி.சி.டி.வி. கேமரா பல இடங்களில் பொருத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்க படவில்லை.

இந்து இயக்கங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இங்கு கைது செய்யப்பட்டவர்களை திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பதால் உறவினர்கள் அவர்களை பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்து இயக்கதை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ், முருகன், சுரேஷ் ஆகியோர் படுகொலை மீது போலீசார் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை.

எனவே தமிழ்நாட்டில் இந்து இயக்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், சசிக்குமார் படுகொலை ஆகிய வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) மூலமோ அல்லது ஐகோர்ட்டு நீதிபதி மூலமாகவோ தனி விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு இந்த கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க பரிந்துரைக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்கு வங்கி அரசியலுக்காக மறுப்பது தமிழக அரசின் தவறான நிலையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார், செயலாளர் நந்தகுமார், கவுன்சிலர் வத்சலா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News