செய்திகள்
கைதான செம்மரக்கடத்தல்காரர்கள் 4 பேரையும், அவர்களை பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

திருப்பதி அருகே போலீசார்-செம்மரக்கடத்தல்காரர்கள் மோதல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது

Published On 2016-09-27 04:41 GMT   |   Update On 2016-09-27 05:24 GMT
திருப்பதி அருகே போலீசார்-செம்மரக்கடத்தல்காரர்கள் மோதலில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி:

திருப்பதி அருகே அங்கன்னதோனா வனப்பகுதியில் செம்மரம் வெட்டும் தமிழக கூலித்தொழிலாளிகள் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக திருப்பதி சிறப்புக்காவல் படை போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
 
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் சிறப்புக்காவல் படை போலீசார் நேற்று காலை அங்கன்னதோனாவை அடுத்த முங்கிலிப்பட்டு அருகே மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது முங்கிலிப்பட்டு மலைப்பகுதியில் செம்மரம் வெட்டும் கூலித்தொழிலாளிகள் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் மலையில் இருந்து கீழே இறங்கி வருவதை சிறப்புக்காவல் படை போலீசார் பார்த்தனர். அவர்களை சரணடையும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், செம்மரக்கடத்தல்காரர்கள் போலீசாரை பார்த்ததும், கீழே கிடந்த கற்களை எடுத்து வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதலில் சிறப்புக்காவல் படை போலீஸ் ஏட்டு இ.ஹரிகிருஷ்ணா என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த சிறப்புக்காவல் படை போலீசார் கற்களை எடுத்து வீசி செம்மரக் கடத்தல்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

செம்மரக் கடத்தல்காரர்களை எச்சரிக்கும் வகையில், சிறப்புக்காவல் படை போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டனர். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதும், செம்மரக் கடத்தல்காரர்கள் தாங்கள் வெட்டிய செம்மரங்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். கடத்தல்காரர்களை போலீசார் விரட்டிச் சென்று 4 பேரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட 4 பேரும் தமிழ்நாடு மாநிலம் தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்களின் பெயர் விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 33 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கூலித்தொழிலாளிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். செம்மரக் கடத்தல்காரர்கள் சமைத்துச் சாப்பிட அங்குள்ள குட்டை தண்ணீரை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. அங்கு செம்மரக் கடத்தல்காரர்கள் தங்கியிருந்த இடங்களையும் போலீஸ் குழுவினர் பார்வையிட்டனர்.

Similar News