செய்திகள்

சசிகலா புஷ்பா எம்.பி. இன்று தூத்துக்குடி வந்தார்

Published On 2016-09-26 11:17 GMT   |   Update On 2016-09-26 11:17 GMT
தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் நடந்த வெங்கடேச பண்ணையார் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சசிகலா புஷ்பா தூத்துக்குடிக்கு வந்தார்.

தூத்துக்குடி:

மேல் சபை அ.தி.மு.க. எம்.பி.யான சசிகலாபுஷ்பா கடந்த ஆகஸ்டு மாதம் டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை தாக்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சசிகலாபுஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சசிகலாபுஷ்பா, அவரது தாய் கவுரி, கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது வீட்டில் வேலை பார்த்த திசையன்விளை ஆணைக்குடியை சேர்ந்த சகோதரிகள் பானுமதி, ஜான்சி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலாபுஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதி மன்றம் சசிகலாபுஷ்பா உள்ளிட்ட 4 பேரையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகலாபுஷ்பா தரப்பில் டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மதுரை ஐகோர்ட்டில் சசிகலாபுஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் 29-ந் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் 6 வாரங்கள் வரை அவர்களை கைது செய்ய தடையும் விதித்தது. இதையடுத்து வெளிநாட்டில் இருந்த சசிகலாபுஷ்பா மதுரை உயர் நீதிமன்ற கிளையில் குடும்பத்துடன் ஆஜரானார்.

இந்நிலையில் முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்களை சசிகலா புஷ்பா தாக்கல் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் மதுரை கோ.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடந்த 14-ந்தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து சசிகலா புஷ்பா எம்.பி., கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்தது போலியான ஆவணங்களை இணைத்தது, மோசடி செய்தல் என்பது உள்ளிட்ட பிரிவுகளில் கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் நடந்த வெங்கடேச பண்ணையார் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சசிகலா புஷ்பா தூத்துக்குடிக்கு வந்தார். அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இதுவரை தூத்துக்குடிக்கு வரவில்லை. டெல்லியிலும், வெளிநாட்டிலும் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று சசிகலாபுஷ்பா தூத்துக்குடி வருவதையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்கனவே வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சசிகலாபுஷ்பா தூத்துக்குடிக்கு வந்தார்.

பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து அம்மன்புரத்திற்கு காரில் புறப்பட்டார். அப்போது அவருடன் சென்னை தொழிலதிபர் ஹரி நாடார் உடன் சென்றார். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அம்மன்புரத்திற்கு சசிகலாபுஷ்பா சென்றார்.

Similar News