செய்திகள்

காவேரிப்பாக்கத்தில் ஜாமீனில் வந்த கொலை கைதி கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2016-09-26 06:09 GMT   |   Update On 2016-09-26 06:09 GMT
ஜாமீனில் வந்த கொலை கைதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவேரிப்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெமிலி:

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் புதுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51). பஜாரில் பாத்திரைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வினோத்குமார் (24). இவரது நண்பர், சுப்பண்ணா முதலி தெருவை சேர்ந்த குமார் மகன் தனசேகர் (21).

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் ஜெ.சி.கே. நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றனர். அங்கு, காவேரிப்பாக்கம் தோட்டக்காரத் தெருவை சேர்ந்த அப்புனு (35) என்பவரும் மது குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அப்புனுவிடம் மதுபானம் தீர்ந்துவிட்டது. குவார்ட்டர் வாங்கவும் பணம் இல்லாமல் அவர் இருந்தார். ஆனால் குடிக்க மனம் ஏங்கியது. இதனால் பக்கத்து, டேபிளில் இருந்த வினோத்குமாரிடம் சென்று அப்புனு கட்டிங் சரக்கு கேட்டார்.

வினோத்குமார் சரக்கு தர மறுத்தார். ஆனால் அவரை விடாமல் அப்புனு சரக்கு கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமாரும், தனசேகரும் உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு ராடால் அப்புனுவை சரமாரியாக தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த அப்புனு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கொலை வழக்காக பதிவு செய்து வினோத்குமார், தனசேகரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் 2 பேரும் வெளியே வந்தனர். காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

சில நாட்கள் தொடர்ந்து கையெழுத்திட்ட 2 பேரும், நிபந்தனையை தளர்த்த கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையேற்று, 2 பேரும் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டால் போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது.

இதனால், 2 பேரும் வெளியில் ஜாலியாக சுற்றி திரிந்தனர். தினசரி மது அருந்துவதையும் வழக்கமாக்கி கொண்டனர். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையிலேயே காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டனர்.

இதையடுத்து மது அருந்திவிட்டு வினோத்குமாரும், தனசேகரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். மாலை 6 மணியளவில், காவேரிப்பாக்கம் பெரிய கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு தனசேகர் மட்டும் தனியாக சென்றார்.

வினோத்குமாரை போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘‘நான் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு’’ அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

அப்போது கிணற்றில் குதித்த தனசேகரை பார்த்த, வினோத்குமார் ஓடிச்சென்று குதித்து நண்பரை பத்திரமாக மீட்டார். மேலே அழைத்து வந்து சமாதானம் செய்தார். ஆனால், சமரசம் ஆகாத தனசேகர் மீண்டும் கிணற்றில் குதித்தார்.

வினோத்குமார் திரும்பவும் நண்பரை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். ஆனால், ஆழத்தில் சிக்கிய தனசேகரை அவரால் மீட்க முடியவில்லை. இதையடுத்து வினோத்குமார் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு ஓடினார்.

போலீசாரிடம் நடந்ததை கூறினார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் ஈடுபடவில்லை. இன்று காலை ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் 6 வீரர்கள் கொண்ட குழு மூலம் தேடுதல் பணி நடந்தது.

20 நிமிட தேடுதலுக்கு பிறகு, தனசேகரை பிணமாக மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடல் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து தனசேகர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில், வினோத்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மையில் காதல் தோல்வியால் தான் தனசேகர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்துவிட்டு வினோத்குமார் நாடகமாடுகிறாரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Similar News