செய்திகள்

மவுலிவாக்கத்தில் இடிக்கப்படும் 11 மாடி கட்டிடத்தில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு

Published On 2016-09-20 09:32 GMT   |   Update On 2016-09-20 09:32 GMT
மவுலிவாக்கத்தில் இடிக்கப்படும் 11 மாடி கட்டிடத்தை இன்று காலை 20-க்கும் மேற்பட்ட சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பூந்தமல்லி:

போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கொண்டு இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இதில் ஒரு கட்டிடம் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்தது. இதில் 61 தொழிலாளர்கள் பலியானார்கள்.

இதுபற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ரபேதி தலைமையிலான குழு மற்றொரு 11 மாடி கட்டிடமும் பலமாக இல்லை. அதனை இடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

அக்கட்டிடத்தை இடிக்க காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை எதிர்த்து கட்டமான நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை வாங்கியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 11 மாடி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து கட்டிடத்தை இடிக்கும் பணியில் சி.எம்.டி.ஏ. தீவிரமாக இறங்கியது. கட்டிடத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கும்பணி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

இப்பணியில் கடந்த 2 மாதமாக அந்நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது தூண்களில் துளைபோட்டு வெடி மருந்து நிரம்பும் பணி நடந்து வருகிறது.

இன்று காலை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் 11 மாடி கட்டிடத்தை ஆய்வு செய்தனர். தூண்களில் வெடிமருந்து நிரப்பும் பணியை பார்வையிட்டனர். பின்னர் இடிக்கப்படும் கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகள், கடைகள் கணக்கெடுத்தனர்.

ஒவ்வொரு வீடாக சென்று அதில் உள்ளவர்களின் விவரங்களை சேகரித்தனர். அதன்பின் வீட்டு கதவில் எண்கள் பொறிக்கப்பட்ட நோட்டீசை ஒட்டினர். 100 மீட்டர் தொலைவில் எத்தனை வீடு, கடைகள் இருக்கின்றன என்ற விவரங்களை சேகரித்தனர். இதை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் போது 100 மீட்டரில் உள்ளவர்களை அப்புறப்படுத்துவதற்காக இந்த கணக்கெடுப்பு நடந்தது.

Similar News