செய்திகள்

தொடர்பை கைவிட சொன்னதால் கள்ளக்காதலியை தீர்த்து கட்டினேன்: கைதான உறவினர் வாக்குமூலம்

Published On 2016-09-10 05:02 GMT   |   Update On 2016-09-10 05:02 GMT
தொடர்பை கைவிட சொன்னதால் கள்ளக்காதலியை தீர்த்து கட்டினேன் என்று கைதான உறவினர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள எஸ்.புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி தெய்வானை(38). இவர்களுக்கு அருள்குமார்(20) என்ற மகனும், தனலட்சுமி(19) என்ற மகளும் உள்ளார்கள்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி ராஜனும், அவரது மனைவி தெய்வானையும் சிறுமுகை அருகே உள்ள மூக்கனூரில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்ள சென்றனர். திருமணத்தில் கலந்துகொண்ட பின்னர், கணவன், மனைவி 2 பேரும் மூக்கனூரில் உள்ள தெய்வானையின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் இருந்த பின்னர் ராஜன் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு இவர் மட்டும் தனியாக வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்கு வந்த அவர், பண்ணாரி கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார். இரவு வீட்டிற்கு வந்த அவர் தனது மனைவி இன்னும் வீட்டிற்கு வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெற்றோர் வீட்டில் விசாரித்தபோது, தெய்வானை அவரது தங்கை சாவித்திரியின் வீட்டுக்கு போய் விட்டதாக கூறினார்கள். ஆனால் மறுநாள் சாவித்திரியிடம் விசாரித்தபோது 6-ந்தேதி காலை 11 மணிக்கு எஸ்.புங்கம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினார்கள். ஆனால் தெய்வானை வீட்டிற்கு வரவில்லை. உறவினர் வீடுகள் மற்றும் அக்கம்பக்கம் எங்கு விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் எஸ்.புங்கம்பாளையத்தில் உள்ள சொலவப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சருகுகளால் மூடப்பட்ட நிலையில் ஒரு பெண் கிடப்பதாக சிறுமுகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அக்கம்பக்கம் விசாரணை செய்தனர். விசாரணையில் பிணமாக கிடந்த பெண், காணாமல் போன ராஜனின் மனைவி தெய்வானை என்பதும், யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர் தெய்வானையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜனின் சொந்த தங்கை ராதாவின் கணவர் முருகன்(42) என்பவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவான முருகன் போலீசாரின் பிடியில் கையும் களவுமாக சிக்கினார்.

போலீசாரின் விசாரணையில் முருகனுக்கும், தெய்வானைக்கும் கடந்த 15 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெய்வானையை கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எனக்கும், தெய்வானைக்கும் கடந்த 15 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துவந்தது. சம்பவத்தன்று நாங்கள் 2 பேரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது தெய்வானை எனது குழந்தை பெரியவர்களாகி விட்டார்கள். எனவே இனி நாம் தொடர்பை துண்டித்து கொள்ளலாம் என்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் மயக்கத்தில் இருந்த தெய்வானையை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் தலைமறைவாகி விட்டேன் என்று கூறியுள்ளார்.

முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Similar News