செய்திகள்

காவிரி நீர் பிரச்சினை: வருண பகவான் கைகொடுப்பாரா?

Published On 2016-09-08 04:15 GMT   |   Update On 2016-09-08 04:15 GMT
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்து விட்டால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது, இதனால் காவிரி நதி நீர் பிரச்சினையும் தீரும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
சேலம்:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி ஒவ்வொரு ஆண்டும் முறையாக காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நதி நீர் பிரச்சினை வரும் போதெல்லாம் இரு மாநிலங்களிலும் பதட்டமான சூழல் நிலவும். பின்னர் அந்த பிரச்சினை தீரும் வகையில் வருண பகவான் கைகொடுத்து கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பொழியும்.

இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதும் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும்.

இந்த தண்ணீர் அதிக அளவில் மேட்டூர் அணைக்கு வருவதால் அணை நிரம்பி டெல்டா பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டு தண்ணீர் பிரச்சினை தீரும்.

அதே போல தற்போது காவிரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பதட்டமான நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டும் நாளை (9-ந் தேதி) முதல் 20 நாட்களுக்கு காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் வயநாடு பகுதியில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கர்நாடக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

அப்படி மழை பெய்யும் பட்சத்தில் அங்குள்ள அணைகள் நிரம்பி கூடுதல் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விட்டால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதுடன் இந்த ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினையும் தீரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Similar News