செய்திகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி பரோட்டா சாப்பிடும் போட்டியில் திணறிய இளைஞர்கள்

Published On 2016-09-07 08:03 GMT   |   Update On 2016-09-07 08:04 GMT
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒரு ஓட்டலில் நடந்த பரோட்டா சாப்பிடும் போட்டியில் 25 பரோட்டாக்களை சாப்பிட முடியாமல் திணறிய இளைஞர்கள் பரிசுதொகையை பெற முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
அன்னூர்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடந்தது.

25 பரோட்டா சாப்பிட்டால் ரூ. 5001 பரிசு வழங்குவதாகவும், போட்டியில் கலந்து கொள்பவர்கள் ரூ.100 முன்பணமும் செலுத்த வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

வெண்ணிலா கபடி குழு திரைப்பட பாணியில் பரோட்டா சாப்பிடும் போட்டி அறிவிக்கப்பட்டதால் ஓட்டலுக்கு கோவை அன்னூர், கோவில் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.

பரோட்டா சாப்பிடும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொள்ள வந்ததால் சுற்று வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டது. முதல் சுற்றில் 5 பேர் பங்கேற்றனர். குருமாவை அதிகம் தொட்டுக்கொண்டால் பரோட்டா சாப்பிட முடியாது என்று உணர்ந்த பலர் பரோட்டாவை மட்டும் ருசி பார்த்தனர். தண்ணீரும் குடிக்கவில்லை.

முதல் சுற்றில் அதிகபட்சமாக கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பசும்பொன் அழகு என்பவர் மட்டுமே 10 பரோட்டாக்களை சாப்பிட்டார்.

2-வது சுற்றில் பங்கேற்ற 6 பேரில் ஒருவர் கூட 7 பரோட்டாவை தாண்டவில்லை. முதல் இரண்டு சுற்றுகளில் பங்கேற்றவர்கள் பரோட்டா சாப்பிட முடியாமல் திணறியதால் 3-வது சுற்றில் யாரும் பங்கேற்கவில்லை.

இதனால் ஓட்டல் நிர்வாகத்தினர் 20 பரோட்டா சாப்பிட்டாலே பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனாலும் யாரும் கலந்து கொள்ளவில்லை.

போட்டியில் கலந்து கொண்டு பரோட்டா சாப்பிட்டவர்கள் அதற்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு பரிசு பெற முடியாத ஏக்கத்தில் திரும்பினர்.

போட்டியில் பங்கேற்க வந்தவர்களை விட வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 10 பரோட்டாக்கள் சாப்பிட்ட பசும்பொன் அழகு என்பவர் கூறும்போது, நான் பரோட்டா மாஸ்டாக உள்ளேன். சாதாரணமாக 20 பரோட்டா சாப்பிடுவேன். ஆனால் இங்கு 10க்கு மேல் சாப்பிட முடியவில்லை. பரோட்டாவின் எடை மற்றும் எண்ணெய் அதிகமாக இருந்தது இதற்கு காரணம் என்றார்.

Similar News