செய்திகள்
கைதான அம்புரோஸ்

கரூர் அருகே பெண்களின் கூந்தலை வெட்டி விற்பனை செய்துவந்த வினோத திருடன் கைது

Published On 2016-09-06 10:51 GMT   |   Update On 2016-09-06 10:51 GMT
கரூர் அருகே பெண்களின் கூந்தலை வெட்டி விற்பனை செய்துவந்த வினோத திருடனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கரூர்:

கரூர் தான்தோணிமலையில் உள்ள ஒரு கோவிலில் கடந்த மாதம் சாமி கும்பிட்டு விட்டு வந்த இரு பெண்களின் கூந்தலை ‘மர்ம’ ஆசாமி ஒருவன் அறுத்து எடுத்து கொண்டு தப்பி சென்றான்.

அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். கரூர் ஈஸ்வரன் கோவிலிலும் இதுபோன்ற சம்பவங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இதையடுத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பந்தபட்ட நபரை பிடிக்க ஈஸ்வரன் கோவில் பகுதியில் வலை விரித்தனர்.

அப்போது பெண்கள் இருக்கும் பகுதியில் சந்தேகப்படும்படியாக மர்ம மனிதர் நின்று கொண்டிருப்பதை கவனித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அவனை மடக்கி பிடித்தனர். கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கத்தரிக்கோல் இருந்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, அவர் கரூர் வழுக்கு பாறையை சேர்ந்த அம்புரோஸ் (வயது 35) என்றும் கோவிலுக்கு வரும் பெண்களின் கூந்தலை வெட்டி செல்வதும் உறுதியானது.

கைதான அம்புரோஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் ஒரு வருடத்திலேய கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெண்களின் கூந்தலை அவர் அறுக்க தொடங்கியுள்ளார்.

துண்டிக்கப்படும் கூந்தலை அவர் ரூ. 400, 500-க்கு விற்பனை செய்ததாக போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். மனைவி பிரிந்த நிலையில் பெண்களின் கூந்தலை துண்டித்து விற்ற அம்புரோஸ் இடையில் அதனை நிறுத்தியுள்ளார். மீண்டும் கூந்தலை அறுக்க தொடங்கிய நிலையில் போலீசில் சிக்கியுள்ளார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்களின் கூந்தலை அவர் அறுத்திருக்கலாம் என தெரிகிறது. ஆனால் சில பெண்களே போலீசில் புகார் செய்துள்ளனர். கூந்தல் திருடன் மாட்டிக் கொண்டதால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Similar News