செய்திகள்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து உள்ளது: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

Published On 2016-08-17 12:20 GMT   |   Update On 2016-08-17 12:20 GMT
தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து உள்ளது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள அய்யம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் அரசு பள்ளிகளின் சாதனை விழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கு மாநில கோஆப்டெக்ஸ் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவரும் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியின் செயலாளருமான வக்கீல் பி.சி.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக திட்ட இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் அரசு பள்ளியில் படித்த காலத்தில் பள்ளிக்கு செல்ல சைக்கிள் மற்றும் செருப்பு கூட கிடையாது. அதே போல் மழை பெய்தால் கூட குடை இருக்காது. முன்பு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் தான் கணினி இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. அனைவரின் கையிலும் கணினி இருக்கிறது.

அதனால் அரசு பள்ளிகளின் தரம் முன்பை விட உயர்ந்துள்ளது. தற்போது படித்தவர்களுக்கு வேலை இல்லை என்பதை விட வேலைக்கு தகுந்த ஆட்கள் இல்லை என்றுதான் சொல்லும் நிலை உள்ளது. மாணவர்கள் எந்த மொழியில் படித்தாலும் வீட்டில் உள்ள பெற்றோர்களிடம் தமிழில் பேச வேண்டும். அப்போது தான் உறவு மேம்படும்.

தமிழில் படித்த எனக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிடைத்தாலும், இந்தியா எனக்கு போதுமான பணியை வழங்கியுள்ளது. தமிழில் படிக்கும் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் படிக்க வேண்டும்.

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். விழாவில் பசுவபட்டி பள்ளி கட்டிட குழு சங்க நிர்வாகி பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News