செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் தோல்விகள் வந்தாலும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்: வைகோ

Published On 2016-08-09 09:15 GMT   |   Update On 2016-08-09 10:53 GMT
உள்ளாட்சித் தேர்தலில் தோல்விகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வைகோ கூறியுள்ளார்.

தேனி:

தேனியில் ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தேனி வந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஓரிருவர் ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு சென்றனர். அந்த இடங்களுக்கு பொறுப்பாளர்களாக புதியவர்களை நியமித்துள்ளோம். தமிழக வாழ்வாதார பிரச்சினைகளுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் உடனே தலையிடுவோம். முல்லை பெரியாறு அணை பிரச்சினையின் போது கட்சியை முன்னிலைப்படுத்தாமல் 558 கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்தோம். இதே போல் நியூட்ரினோ, காவிரி, பாலாறு பிரச்சினைகளுக்கு தன்னலம் கருதாமல் பாடுபடுவோம்.

தி.மு.க., அ.தி.மு.க. பிடியில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற குறிக்கோளில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது. கங்கை வெள்ளமென பாய்ந்த ஊழல் பணம் தேர்தல் முடிவை மாற்றி விட்டது.

உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். எவ்வளவு தோல்விகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்போம். மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் அங்கு புதிய அணை கட்டுவோம் என கேரள அரசு கூறுவது கவலை அளிக்கிறது. இதனை மத்திய, மாநில அரசு வேடிக்கை பார்க்க கூடாது.

கடமலைக்குண்டு பழங்குடியின மக்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வன அலுவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். வன்முறை சம்பவங்களுக்கு மதுவே காரணம். தமிழக அரசு விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் கல்வி கடனை அரசே ஏற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News