செய்திகள்

நாடார் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

Published On 2016-08-08 10:53 GMT   |   Update On 2016-08-08 10:53 GMT
நாடார் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை:

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் காமராஜரின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் தூத்துக்குடியில் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.நாராயணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற மத்திய அரசு உரிய அங்கீகாரத்துடன் திட்டங்களை தீட்ட வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும். அதுவரை பனை, தென்னை தொழிலாளர்கள் ‘கள்’ இறக்கி விற்பனை செய்ய உரிமம் வழங்க வேண்டும்.

நாடார் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி முதல் சென்னை வரை இரட்டை ரெயில் பாதை திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நெல்லை மாவட்ட மக்களின் விவசாயத்துக்கும் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தும் விதமாக கெனடியான் கால்வாய் திட்ட பணிகளை விரைவு படுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் சீன பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News