செய்திகள்
ரோகித் சர்மா

புஜாரா மீதான விமர்சனத்துக்கு ரோகித் சர்மா பதிலடி

Published On 2021-08-28 06:08 GMT   |   Update On 2021-08-28 06:08 GMT
புஜாரா கடைசியாக 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் சதம் (193 ரன்) அடித்தார். அதன்பிறகு அவர் சதம் எதுவும் அடிக்கவில்லை.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 432 ரன் குவித்தது. கேப்டன் ஜோ ரூட் 121 ரன்னும், டேவிட் மலான் 70 ரன்னும், ஹசிப் ஹமீது 68 ரன்னும் எடுத்தனர். முகமது ‌ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.


354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 91 ரன்னும், கேப்டன் விராட் கோலி 45 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ராகுல் 8 ரன்னிலும், ரோகித் சர்மா 59 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இன்று 4 -வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த டெஸ்டில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 139 ரன் தேவை. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது.

நேற்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பேட்டி அளித்தார். அப்போது அவர் புஜாரா மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

புஜாரா ஒரு திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். இதை அவர் எப்போதும் உணர்த்தி இருக்கிறார். சில நேரங்களில் நமது நினைவுகள் தான் அதை மறந்து விடுகின்றன.

நானும், புஜாராவும் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினோம். புஜாரா அதில் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய திறமை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அவர் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

முதல் இன்னிங்சில் எங்களது பேட்டிங் ஒட்டு மொத்தமாக மோசமாக அமைந்துவிட்டது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஜோடி நிலைத்து ஆடினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புஜாரா கடைசியாக 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் சதம் (193 ரன்) அடித்தார். அதன்பிறகு அவர் சதம் எதுவும் அடிக்கவில்லை. இதனால் தான் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். புஜாராவின் சிறப்பான ஆட்டம் மூலம் அவர் மீதான விமர்சனத்துக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த டெஸ்டில் புஜாரா 91 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News