செய்திகள்
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் பதிலுக்காக ஜூன் மாதம் வரை காத்திருப்போம்- பாகிஸ்தான்

Published On 2019-09-30 10:49 GMT   |   Update On 2019-09-30 10:49 GMT
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வந்து விளையாட சம்மதம் தெரிவிக்குமா? என்பதை தெரிந்து கொள்ள அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நேரம் இருக்கிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆசிய நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கிறது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நடத்துகிறது. இந்தத் தொடரை பாகிஸ்தானில் நடத்த விரும்புகிறது.

கடந்த முறை நடைபெற்ற போட்டி இந்திய மண்ணில் நடைபெற இருந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாட சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் தொடரில் இந்தியா பங்கேற்குமா? இந்தியா பங்கேற்கவில்லை என்றால் பொதுவான இடத்தில் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா வருகையை உறுதிப்படுத்த அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நேரம் இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சிஇஓ வாசிம் கான் கூறுகையில் ‘‘ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா சம்மதம் தெரிவிக்குமா? என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் வரை நேரம் இருக்கிறது.

பாகிஸ்தானில் நடத்த முடியவில்லை என்றால், அது இந்தியாவின் ஈடுபாட்டில் உள்ள குறைபாடே காரணமாகும். இதனால் ஜூன் மாதத்திற்குள் ஆசிய கோப்பையை நடத்த நாங்கள் தயாராக வேண்டும்.

போட்டி பொதுவான இடத்திற்கு மாற்றப்படுவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் முடிவு எடுக்க முடியும். இந்தியாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கிரிக்கெட் போர்டு அளவில் இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால், அவர்களுக்கு ஏராளமான வகையில் அரசு தலையீடு உள்ளது. இந்தியாவுடன் இரு நாட்டு தொடருக்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய முடியாது.

இந்தியா விரும்பினால் எங்களுடன் பேச வேண்டும். அத்துடன் உறுதியான உறுதிபாட்டை கொடுக்க வேண்டும். பொதுவான இடத்தில் விளையாட எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை’’ என்றார்.
Tags:    

Similar News