செய்திகள்
முன்சே

200 ரன்கள் பார்ட்னர்ஷிப்: 252 ரன்கள் குவிப்பு- டி20-யில் ஸ்காட்லாந்து அசத்தல்

Published On 2019-09-17 10:10 GMT   |   Update On 2019-09-17 10:10 GMT
தொடக்க பேட்ஸ்மேன்கள் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுக்க டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து 252 ரன்கள் குவித்தது.
ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின.

நெதர்லாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது.

முன்சே, கோயெட்சர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமாக விளையாடினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி 15.1 ஓவரில் 200 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த 3-வது ஜோடி என்ற பெருமையை பெற்றது.

கோயெட்சர் 50 பந்தில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முன்சே 41 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 56 பந்தில் 5 பவுண்டரி, 14 சிக்சருடன் 127 ரன்கள் குவித்தார். பெர்ரிங்டன் 16 பந்தில் 22 ரன்கள் அடிக்க ஸ்காட்லாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது.



பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது. சீலார் ஆட்டமிழக்காமல் 49 பந்தில் 96 ரன்கள் குவித்தாலும், அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களே எடுத்தது. இதனால் ஸ்காட்லாந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்காட்லாந்து 252 ரன்கள் அடித்திருப்பது டி20-யில் 3-வது மிகப்பெரிய ஸ்கோராகும்.
Tags:    

Similar News