செய்திகள்
ரபேல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால்- மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2019-09-07 05:03 GMT   |   Update On 2019-09-07 05:03 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், ரபேல் நடால் மற்றும் மெத்வதேவ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
நியூயார்க்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ பிரிட்டினியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-6, 6-4, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபனில் ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார் நடால். அத்துடன், ரோஜர் பெடரருக்குப் பிறகு ஒவ்வொரு கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் குறைந்தது 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் நடால் பெற்றுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மெத்வதேவ், பல்கேரிய வீரர் திமித்ரோவை 7-6, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.



ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் நடால், மெத்வதேவ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இறுதிப்போட்டி குறித்து நடால் கூறுகையில், “இறுதிப் போட்டியில் என்னை எதிர்த்து விளையாடும் மெத்வதேவ் சவாலாக இருப்பார். எனவே, நான் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News