செய்திகள்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி

இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் - ஹேமங் பதானி

Published On 2019-07-08 05:50 GMT   |   Update On 2019-07-08 05:50 GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி மூலம் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட கூட வாய்ப்பு கிடைக்கலாம் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.
திருச்சி:

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்தார்.

4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. நத்தத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

இதில் தலா 15 ஆட்டங்கள் நெல்லை, நத்தம் ஆகிய இடங்களிலும், 2 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்திலும் நடைபெறும். முதல் போட்டி மாலை 3.15 மணிக்கும், 2-ம் போட்டி இரவு 7.15 மணிக்கும் தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளருமான ஹேமங் பதானி திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இளம் வீரர்களுக்கு வருங்கால வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த போட்டி தொடரில் வீரர்கள் நன்றாக விளையாடினால் ஐ.பி.எல்.லில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் மாநில அணிக்கு தேர்வாக முடியும். கடந்த முறை நன்றாக விளையாடிய விவேக், ஹரீஷ் உள்ளிட்ட வீரர்களுக்கு மாநில அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதேபோல போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் போது அதிக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ரஞ்சி டிராபி, ஐ.பி.எல். மட்டுமில்லாமல் இந்த போட்டியில் இருந்து இந்திய அணிக்கு சென்று கூட விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி டி.வி.க்களில் ஒளிபரப்பப்படும் போது இளம் வீரர்களின் திறமை வெளி உலகிற்கு தெரியவருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், பல புதிய வீரர்களை உருவாக்கும் தளமாகவும் டி.என்.பி.எல். அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News